அவதிப் பொதுமை
இங்கே அவதி எனும் பதம்; எதனையும் ஆராய முற்படாத அவசரம் என்பதாக அர்த்தப் படுகிறது. ;கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் போய்- தீர விசாரித்தறிவதே மெய்; என்ற முதுமொழி , வழக்கொழிந்து வருவது போலத் தெரிகின்றது, சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப்படும் சட்டபூர்வமான தீர்ப்புக்கள் கூட சிலவேளைகளில் சர்ச்சைக்குள்ளாகின்றன,
பொதுவாழ்வில் ஒருவர் எவ்வளவுதான் நன்மைகளைச் சமூகத்திற்கு நயந்திருப்பினும் சந்தர்ப்பவசமாக நேரக்கூடிய ஒரு சிறு தவறு , ;வெண்திரையின் கரும் புள்ளியாகத் தெட்டத்தெளிவுறத் தெரியும், குறித்த நபருக்கு ஏதேனும் விபரீத விளைவு விளையுமாயின் ,இந்தக் கரும்புள்ளியே அதற்குக் காரணியாக்கப் படுகிறது,
சூழ்ந்திருந்த அவ்வினையே இது; என்பது சுருக்கமான தீர்ப்பாகி விடுகிறது, தமது இறுதிக் காலத்தில் ஓரளவு பொருளாதார பலத்துடனும் சமூக மதிப்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு , அவரது ஒரே வாரிசினால் எதிர்பாராத பேரிழப்பு ஏற்படுகிறது என வைத்துக் கொள்ளலாம், வருவாயிலும் கூடுதலாகச் செலவினம் உயர்கையில் ; சாண் ஏற முழம் சறுக்குகிறதே!…எனச் சம்மந்தப்பட்டோர் அங்கலாய்ப்பர், இங்கோ மில்லி மீற்றர் ஏற கிலோ மீற்றர் சறுக்கிற அதலபாதாள வீழ்ச்சி, பெரும் புதிராக, இத் தேட்டங்கள் யாவும் போய்த் தொலைந்த இடம் இப்பிரபஞ்சத்தின் ஏதுமொரு கருந்துளையோ? எனும் படியாக ஆச்சரியமே எல்லோர் எண்ணங்களிலும் நிலவுகிறது, அவரது குடும்பம் தனிமைப்படுகிறது,
இப்போது குறித்த குடும்ம்பத்தலைவரின் ஏதோ கடந்த கால பாரிய தவறுதான் அவர்களின் நரக நுழைவுக்கு மூலகாரணி! என்ற பிரேத பரிசோதனை அறிக்கை பிரகடனமாகிறது, இவ்வகையான குத்ர்க்கக் கூற்றுக்களை நியாப்படுத்துவதற்கு; அவதிப் பொதுமை: ஏதுவாகிறது, உண்மையில், பாதணிகளுக்குப் பொருந்துமாறு பாதங்களைச் செதுக்கும்” அபத்த காரியமே இங்கு நிகழ்ந்திருக்கின்றது,
மெய்–பொய்களின் தாற்பரியங்களை வேறு படுத்திப் புரிந்து கொள்ள முன்வாராத சில குறுகிய மனதுடையோரின் இந்த அவதிப் பொதுமைத் தீர்ப்புக்கள் அசல் தீர்வுகள் அல்ல!, அவர்களின் சுய அளவு கருவிகளினால் ஏற்கனவே நிர்ணயிக்கக் பட்டிருக்கும் கணிப்பீடுகளே அவை,
இந் நிலையானது தனி நபர் அல்லது குடும்பமொன்றின் சுமுகமான சமூக உறவிற்கோ சகஜமான இயல்பு வாழ்விற்கோ துணை வராது, மாறாக மன விரிசல்களை மேலும் விசாலிப்பதற்கும், அவலக் குழிகளை இன்னும் ஆழப்படுத்துவதற்குமே வகை செய்யும்,
பொதுவில், இந்த ;அவதிப் பொதுமை: ஆனது, குதர்க்க வாதங்களின் குவியல், அபத்தங்களின் அரைவேக்காட்டு அவியல், அவ்வளவே!.
இடைக்காடு இளைய பண்டிதன்.