download

ஒருகாதால் வாங்கி மறு காதால் விட வேண்டிய சங்கதிகள் பலவும் எம்மைச் சுற்றி உள்ளன, ” முதுகின் பின்னால் எழும் விமர்சனங்களில்” அதிகமானவை அத்தகையனவே! பெரும்பாலும் முகத்துதிக்கு மயங்குபவர் தமது முகத்திற்கு முன்னால் காட்டமான கருத்தெதையும் எதிர்கொள்ள நேரிடுகின்ற சந்தர்ப்பங்களில், அதனைச் செவிமடுப்பதனைத் தவிர்த்துக் கொள்வர். அப்போது அவர் காதுகள் கேட் “காது ” களாகி விடும், பொதுவில் இது இயல்பே !

ஆனால், இந்நிலையானது சில சமயங்களில் விபரீதங்கள் எதனையும் அறிந்துகொள்ள முடியாத இருளுக்குள் அவர்களை அமிழ்த்தி விடக்கூடும் . அவ்விதம் செவி வழியாக தெரியவருகின்ற ஒரு பாரதூரமான கருத்து அல்லது தகவலின் உண்மைத்தன்மையை, உடனுக்குடன் பரிசீலித்து அதற்குரிய பரிகாரம் தேடப்படாத விடத்து பின் விளைவுகள் மோசமாவதற்கு இடமிருக்கின்றது………………. எடுத்துக் காட்டாக………………

வெளியூரில்- வெளிநாட்டில் கல்வி பயிலும்- தொழில் புரியும் அல்லது தேடும் “இளைஞர்” ஒருவரின் நடத்தைப் பிறழ்வுகள் பற்றிய தகவல் அவரின் குடும்ப உறவுகளுக்கு காற்று வாக்கில் கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது வெறும் வதந்தியாக இருக்கலாம்; இன்னும் குழப்ப அனலில் கூதல் காய்பவரின் சில்மிக்ஷக் கூத்தாகவும் கூட இருக்கலாம் அதற்காக- இச் செய்தியானது விசுவாசப் பொறுப்புடனா அல்லது விசமக் காழ்ப்புடனா கசிந்துள்ளது, என்றெலாம் தமக்குள்ளே விவாதித்துக் கொண்டிருந்தால் – அது காலத்தையே விரமாக்கும். இந்தத் தயக்க இடைவெளியில், அங்கிருக்கும் நிலைவரங்கள் தீவிரமடைந்து போய்விடுவதற்கு நிறையச் சாத்தியமுள்ளது.

இந்தத் தவற் சூத்திரதாரி எவரோ அவர் தனிப்பட்ட ரீதியில் ஒழுங்கீனர் என்று பெயர் எடுத்திருக்கக்கூடும். இந்தக் கட்டத்தில் அது ஒரு பொருட்டே அல்ல! குறித்த தகவலின்நிஜ சொரூபம்தான் அக்கறைப்பட வேண்டிய- அவசரம் காட்டத்தகுந்த அவசியவிடயமாகும். குற்றம் சுமந்திருக்கும் தமது அந்த உறவின் எதிர்கால சுபீட்சத்தில்தான் சம்பந்தப்பட்ட குடுப்பத்தினரின் முழுக்கவனமும் குவிக்கப்பட வேண்டும். அவர்கள் சடுதியாக்க் களத்திலிறங்கி அடி முதல் நுனி ஈறாக ஆராய வேண்டும் இதுவே அர்ப்பணிப்புடனான முதன்மைப் பணியாகும்.

எடுத்த எடுப்பில் அந்த உறவினை நேரடி விசாரணைக்குட்படுத்தல் ஏற்புடையதன்று, அவர் உண்மையான அப்பாவி ஆயின் இவ்வித நெருக்குவாரம் அவர் மன நிலையில் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். குற்றம் உண்மையாக இருக்கும் பட்சத்திலோ-தம்மவர் விழிப்படைந்து விட்டனர் என அறிந்ததும் , முன்னெச்சரிக்கையாக தமக்கெதிரான சாட்சியங்களையும் தடயங்களையும், கலைப்பதில் அவர் மும்முரமாவார், ஒரு பொய்யைமேவுவதற்கு ஒராயிரம் பொய்களை உற்பத்தியாக்கும் முனைப்பில் அவர் இறங்குவார். தம்மை நியாயப்படுத்திக் கொள்வதற்கு எப்படியெல்லாமோ கபட தந்திரங்களைக் கையாண்டு, தமது காலத்தையும் கைப்பொருளையும் எல்லைமீறிச் செலவிடும் நிலைக்கு அவர் பரிதாபகரமாகத் தள்ளப்படுவார்.

எனவே, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் வீனான வினைக்கு ஆளாகமல் இக் குடும்பமானது உரிய காலத்தில் மதி நுட்ப நிதானத்துடன் செயற்பட்டால் மாத்திரமே இவ் வகையான வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரலாம். இதனை விடுத்து, துரதிட்ட வசமாக- தமது வாரிசு மீதான கண்மூடித்தனமான பாசமானது, மெய்மையின் தரிசனத்திற்கு கண்களைத் திரையிட்டு நிதர்சனத்தின் குரலையும் கிரகிக்க முடியாபடி இவர் காதுகளைக் கேட்” காது ” களாகவே ஆக்குமாயின் -குறுகிய காலக் கழிவில்,இந்தக் குடும்பத்தின் நியாயபூர்வ நம்பிக்கைகள் பலவும், எண்ணியிருந்த எதிர்பார்ப்புக்கள், பிறவும் பாழாகும்!

இவர்தம் இயல்பு வாழ்வும், சமூக மதிப்பும் தலைகீழாகும்!!

இடைக்காடு இளைய பண்டிதன்.

Last Modified: July 26, 2015