நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவர்க்கும் எனது 2016ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என்ன ஓட்டமாக ஒருவருடம் ஓடிவிட்டது. எமக்கும் ஒரு வயது கூடிவிட்டது.. சில மாதங்கள் ஒருசில வசதியீனங்கள் காரணமாக நான் இந்தப் பக்கத்துக்கு வரமுடியவில்லை. எனினும் உங்களுடன் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு நிறையவே உள்ளன.
அவ்வப்போது இந்தப்பக்கத்தில் நான் வருவேன். அறிவுப் பசிக்கான சிற்றுண்டிகள் இங்கே இலவசமாகக் கிடைக்கும். படிக்க நீங்கள் ரெடியானால் படைக்க நான் ரெடி. முதலில் சமையலைப்பற்றி படைப்போமே….. படிப்போமே.
அன்புடன் கந்தவேல்
03.01.2016

சமையல் என்பது……

getty_rf_photo_of_spice_jars_on_counter

மனித வாழ்வின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் என்ன?
உணவு, உடை, உறைவிடம்.
இம்மூன்றில் முன்னிலை வகிப்பது உணவுதான்.
பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என சும்மாவா சொன்னார்கள்.
பசி வந்தால் கையும் ஓடாது, காலும் ஓடாது அடுத்தவரைப்பற்றி சிந்திக்கமாட்டோம். நாளைய பொழுதும் ஞாபகம் வராது. பசி தீர்ந்தால்தான் பஞ்சணையும் ஞாபகத்துக்கு வரும்.

வயிற்றுப் பசியும் நாக்கு ருசியும் எம்மை ஆட்டிப் படைக்கின்றன.
ஒரு நடிகை, கவர்ச்சி நடிகை. அரைகுறை ஆடையில் வயிற்றைக் காட்டி காட்டி நாட்டியம் ஆடினாள். ஒரு நிருபர் அதைப்பற்றிக் கேட்டார்.
ஏன் புரியவில்லையா எல்லாம் இந்த வயிற்றுக்காகத்தான் என்று கூறினார் அவர்.
ஒரு சாண் வயிற்றுக்கு வழியில்லாத போது ஒரு முழம் கயிறல்லவா, கயிறும் படைத்து வயிறும் படைத்த உன் மேல் தவறல்லவா என கடவுளைப் பார்த்து கண்ணதாசன் கேட்டார்.

கைநிறைய சம்பாதிக்கும் கணவன் கிடைத்தால் ஒரு பெண் எப்படி அதிர்ஷ்டசாலியோ அப்படி வாய்க்கு ருசியாக சமைக்கும் மனைவி கிடைத்தால் கணவனும் அதிர்ஷ்டசாலிதான்.
பெண்களுக்கு மட்டுமா சமைக்கத் தெரியும்?.
பெண்களைப் போல் ஏன் பெண்களைவிட நன்றாகச் சமைக்கத் தெரிந்த ஆண்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள்பாடு அதோ கதிதான். ஒவ்வொரு சமையலிலும் குறைகண்டு கொண்டே இருப்பார்கள். ஏன்ரா இவனை முடித்தோம் என்று அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. அதே வேளை சமையலே தெரியாத ஆணுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் பாடு கொண்டாட்டம்தான். சமையலில் நீட்டு முடக்கு எதுவுமே கணவனுக்குத் தெரியாது. மனைவி சொல்லே மந்திரம் என்பது போல் மனைவி சமையலே தேவாமிர்தம் என எண்ணிக் கொள்வார்.

எல்லாம் அனுபவம்தான்.
எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் சமைக்கத் தெரியும். எனவே அவ்வப்போது மனைவியின் சமையலின் குறை நிறைகளை அலசி ஆராயும்போது.. நிச்சயம் என்னை மனதுக்குள் திட்டித் தீர்த்திருப்பார்.

உப்பிட்டவனை உள்ளவும் நினை.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்றும் கூறுவார்கள்.
இது எனக்கு உடன்பாடானதல்ல. உப்பில்லாத உணவைக் கூட உண்டு விடலாம். ஆனால் அளவுக்கதிகமான உப்பு சேர்ந்த உணவை எவருமே உண்ணமுடியாது. அதனால்தான் அக்காலத்தில் சிறைக் கைதிகளுக்கு உப்பும் சோறும் கொடுப்பார்கள் போலும்.
17 வயதுவரை அம்மாவின் சமையலில் உணவு உண்ட நான் பின்னர் வன்னியில் கமத்தில் தனியே வாழ வேண்டி ஏற்பட்டது. ஒருநாள் முதன் முதலில் நானே சமைத்துச் சாப்பிடவேண்டிய சூழல்.
கழி செய்வது இலகுவானது. சட்டியில் தேங்காய்ப்பால் கொதிக்க வைத்தேன். உப்பைப்போட்டு கழி கிண்டியாயிற்று. ஒரு சமையல் செய்துவிட்டேன் என்ற பரம திருப்தி.
கழியை வாயில் வைத்தேன். உப்பென்றால் அப்படி ஒரு உப்பு.. சிறிதுகூட உள்ளே போகவில்லை. வாய்க்குள் வைத்ததையும் வெளியே துப்பிவிட்டேன். வேடிக்கை இனித்தான் உள்ளது. சரி இது சரிப்படாது என நினைத்து அதை எங்கள் வீட்டு நாய்க்கு வைத்தேன். சிறிது நக்கிப் பார்த்துவிட்டு அதுவும் விலகிச் சென்றுவிட்டது. நல்லவேளை அதற்கு கதைக்கத் தெரியாது. தெரிந்திருந்தால் என்னைத் திட்டித்  தீர்த்திருக்கும். அயவலருக்கும் கூறி என்னை நாறடித்திருக்கும்.
அதுதான் கடைசியும் முதலும். அதன்பின் இன்றுவரை என் சமையலில் உப்பு கூடவும் இல்லை. குறையவும் இல்லை.
இது எனக்கு கொண்டாட்டம்…. என் மனைவிக்கு…..அதை  நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
என் மனைவியை  நான் என்றுமே விட்டுக் கொடுக்கமாட்டேன்.

பொன் கந்தவேல்
03.1.2016