தண்ணியும் தண்ணீரும்

water

இது தண்ணீரைப்பற்றிய ஒரு சமாச்சாரம்.
உலகம் ஐம்பூதங்களால் ஆனது., உடல் ஐம்பொறிகளால் ஆனது. உடல் உயிருடன் இருப்பதற்கு ஆதாரமே ஐம்பூதங்கள்தான்.
தங்கியிருப்பதற்கும், உணவு உற்பத்தி செய்வதற்கு நிலம் இன்றியமையாதது. நீர் இல்லாமல் முடியுமா? சொல்லவே தேவையில்லை. தீ.. உணவு சமைக்க, அதை விடுங்கள். வெப்பம் இல்லவிட்டால் விறைத்தே செத்துப்போய்விடுவோம். காற்று இல்லாமல் ஒரு நிமிடம் உயிர் வாழமுடியுமா? ஆகாயம்.. இங்கேதானே எமக்குத்தேவையான காற்று அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றது, சூரிய ஒளியைக்கடத்திவருகின்றது. மழையைத்தருகின்றது. இப்படி.. இப்படி எம் உயிர் வாழ்தலுக்கான உணவினை ஊட்டத்தினை இவைதான் எமக்கு வழங்குகின்றன.
உணவு திண்ம திரவ வாயு வடிவங்களில் கிடைக்கின்றன. திண்ம உணவை நாம்தான் உற்பத்தி செய்யவேண்டும். திரவமும் வாயுவும் இலவசமாகக் கிடைக்கின்றன. உண்மையில் திண்ம உணவைவிட மற்றைய இரண்டுமே இன்றியமையாதன. அது இலவசமாக எமக்குக் கிடைப்பதால் அதன் பெறுமதி எமக்குத் தெரிவதில்லை..
உணவின்றி ஒருமாதம் உயிர் வாழலாம். நீரின்றி ஒருவாரம் உயிர் வாழலாம், காற்றின்றி ஒரு நிமிடம் உயிர் வாழ முடியுமா? இதில் விசித்திரமானது திரவம் தான். நீராக எம்மை உணவூட்டுகின்றது. பனிக்கட்டியாக வட தென் துருவங்களில் நீரின் அளவினைச் சுருக்கி நிற்கின்றது. வாயுவாக மழைமுகிலாக மேகத்தில் மண்டிக்கிடக்கின்றது.
இந்த பூமிப்பந்து 70% நீரால் ஆனது. அவ்வாறே எம் உடலும் 70% நீரல் ஆனது. அதன் பயன்பாடும் அளப்பரியது. உடலுக்கு உணவாக, உடலின் வெப்பத்தை சீராக்க திரவக்கழிவுகளை வெளியேற்ற இன்னோரன்ன. அதனால் ஒவ்வொரு நொடியும் எமது உடல் நீர்ப்பற்றை இழந்துவருகின்றது, அதற்காக ஒவ்வோர் நாளும் நாம் 3 லீற்றர் நீரினை உட்கொள்ளவேண்டியுள்ளது.
மனிதனின் செய்கைகள் விசித்திரமானவை.
மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீரை இறைவன் படைத்தான். தன்னைத்தான் அழிப்பதற்கு தண்ணியை மனிதன் படைத்தான்.
தண்ணீர் குடித்தால் உயிர் வாழலாம்
தண்ணி அடித்தல் உயிர் போய்விடும்.
சரி, மதுசாரத்தை ஏன் தண்ணி என்று கூறுகிறார்கள்? அதுவும் தண்ணி வடிவத்தில் இருப்பதால் போலும். மது உடலுக்கு கெடுதியானது எனத்தெரிந்திருந்தும் அதன்மேல் மோகம்கொண்டு மனிதன் அலைவதை என்னவென்று சொல்ல?
மதுவின் பாவனை இன்று நேற்றல்ல அந்தக்காலம் தொட்டே இருந்தபடியால்தானே கள்ளுண்பார் நஞ்சுண்பவர் என வள்ளுவர் கூறிச்சென்றார். மது அருந்துவது இன்று ஒரு நாகரீகமாகவே மாறிவிட்டது. எமது தாயகத்தில் மதுவில் எவ்வித தரக்கட்டுப்பாடோ மதுசாரத்தின் அளவோ குறிப்பிடப்படுவதில்லை. அங்கு பாவனையிலுள்ள கள்ளு கசிப்பு முதலானவை நஞ்சின் மறுவடிவமாகவே செயற்படுகின்றன.
மதுவுக்கு அடிமையானோரை இரு வகையாகப்பிரிக்கலாம். சிலர் எப்போதாவது குடிக்கிறார்கள். சிலர் எப்போதுமே குடிக்கிறார்கள். எப்போதாவது குடிப்பவர்கள் தங்களுக்கு தாங்களே கொள்ளி வைத்துக்கொள்ளுகிறார்கள். எப்போதுமே குடிப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கே………
இதில் நீங்கள் எந்த வகையில் அடங்குகிறீகள்? ஒருவகையிலுமே இல்லையா?
சபாஸ், உங்கள் முதுகை நீங்களே ஒருமுறை தட்டிக்கொள்ளுங்கள்.

drink

பொன் கந்தவேல் – கனடா
10.03.2016