images (1)நெஞ்சைத்தொட்டது…….

குழிபறிக்கும் குடி

மனிதனுக்கு ஆறறிவு. மிருகங்களுக்கு ஐந்தறிவு., பறவைகளுக்கு நான்கறிவு.. எனினும் மிருகங்களிடமும் பறவைகளிடமும் நாம் கற்பதற்கு நிறையவே உள்ளன. ஆனால் எம்மிடம் அவை கற்பதற்கு எதுவுமே இல்லை.

எம்மூர் இடைக்காடு மகாவித்தியாலயத்தில் பத்தாம் வகுப்பில் சுகாதார பாடத்தில் நான் படித்த பாடல் இன்னமும் என் ஞாபகத்தில் உள்ளது.

காலை எழுந்திருத்தல் காணாமலே புணர்தல்

மாலை குளித்து மனைபுகுதல் – சால

உற்றாரோடுண்ணல் உறவாடல் இவ்வாறும்

கற்றாயோ காக்கைக்குணம்

கனடாவில் காக்கைகளைக் காணமுடிவதில்லை. ஆனால் எம்மூரில் எங்கும் நிறைந்திருக்கும் ஆனால் எவரும் விரும்பாத காக்கைகளிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஆறு குணங்கள் உள்ளன என்பதையே இப்பாடல் கூறுகின்றது.

மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும்போது இல்லாத பொல்லாததை எல்லாம் வாய்க்குள் திணித்து பெற்றோரைச் சங்கடத்தில் மாட்டிவிடுகின்றனர். மிருகங்கள் தம் பெற்றொர்க்கு எந்தச் சிரமத்தையும் வைப்பதில்லை. மாட்டுக்கன்றோ ஆட்டுக்குட்டியோ உணவு உண்ண ஆரம்பிக்கும்போது அதனை மணந்து பார்த்து  தனக்கு வேண்டியதை மட்டுமே உண்கின்றன.

சரி குழந்தையை விடுங்கள். பெரிய மனிதர்களே இது எம் உடல் நலத்துக்கு கேடானது உயிரையே பறித்துவிடும் எனத்தெரிந்தும் மதுவுக்கு அடிமையாகி தமது மரணத்தையே விலைகொடுத்து வாங்குகிறார்களே இதை என்னவென்று கூற. அதனால்தான் கள்ழுண்பார் நஞ்சுண்பவர் என அன்றே வள்ளுவன் கூறிவைத்தான் போலும்.  என்ன..நஞ்சு உடனே கொன்றுவிடுகின்றது. மது தவணை முறையில் கொல்கின்றது. அவ்வளவே.

ஒரு மனிதன் குடும்பத்தில், சமூகத்தில் ஒரு அங்கமானபின் அவனது பொறுப்புக்கள் விசாலமானவை.  மதுவின் மூலம் தன்னைத்தான் அழித்துக்கொள்ளும்போது தன் பொறுப்புக்களைத் தட்டிக்கழித்துவிடுகின்றான். அவன் குடும்பம் அனாதரவாகிவிடுகின்றது. ,சமூகம் அவன் சேவையை இழந்துவிடுகின்றது. மதுவுக்கு அடிமையானவன் பாதிவயதில் பரலோகம் போய் விடுகின்றான். இது ஒரு வகையில் தற்கொலைக்குச் சமனானதே. கொலை செய்வது எவ்வாறு சட்டவிரோதமானதோ அவ்வாறே தற்கொலை செய்வதும் சட்டவிரோதமானதே. அதை மேற்கொள்வதற்கு எவருக்கும் எவ்வித உரிமையுமில்லை.

மண்ணின்மீது ஆசைகொண்ட மனிதன் இறுதியில் மண்ணோடு மண்ணாவதுபோல் மதுவின்மீது மோகம்கொண்ட மனிதனும் இறுதியில் மதுவாலே மாண்டுபோகின்றான்.

இன்றுநேற்றல்ல. ஆண்ண்டாண்டு காலமாக மதுவுக்கடிமையாகி பாதிவயதில் விடைபெற்றுச் சென்றோர், தம் உறவுகளை நட்டாற்றில் விட்டுச் சென்றோர், அப்பா குடித்து அழிந்தபின்பும் குடிக்காக அவர் பட்ட கடனை அழுதழுது கட்டிமுடித்த பிள்ளைகள் ஆயிரம்…. ஆயிரம்.

குடிப்பழக்கம் தவறானது எனத்தெரிந்தும் அதையிட்டு பெருமைபேசுவோர் இன்னமும் எம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.

சிலர் எப்போதாவது குடிக்கிறார்கள்., சிலர் எப்போதுமே குடிக்கிறார்கள். ஒரு வேடிக்கையான சம்பவம். எப்போதாவது குடிக்கும் ஒருவரும் எப்போதுமே குடிக்கும் ஒருவரும் சுகவீனம் காரணமாக வைத்தியரிடம் போனார்கள். இருவரது இரத்தத்தையும் சோதித்த வைத்தியர் கூறினார், எப்போதாவது குடிப்பவரின் இரத்தத்தில் சிறிது மதுசாரம் கலந்துள்ளது என்று. மற்றவரின் உடம்பில் ஓடும் மதுசாரத்தில் சிறிது இரத்தம் கலந்துள்ளது, என்று. இது வேடிக்கையானது மட்டுமல்ல., சிந்திக்கவேண்டியதும் தான்.

சரி அப்படி மதுவில் அவர்களை மயக்குமளவுக்கு என்னதான் மாயம் உள்ளது. அவர்கள் கூறும் காரணம் இதுதான். வாழ்க்கையில் படும் துன்பம் தாங்கமுடியவில்லை. உள்ளேபோன மது சிலமணிநேரமாவது எம் துன்பத்தை விரட்டிவிடுவதால் துன்பத்தை மறந்து சற்று நேரம் நிம்மதியாக இருக்கமுடிகின்றது. சரி, ஒருவன் பெரிய துன்பத்தை அனுபவிக்கிறான் என்றால் அதில் அவன் மனைவிக்கும் கணிசமான பங்கு உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. சொக்கதங்கமாக இருந்த சில ஆண்கள்  திருமணத்தின்பின் குடிகாரர் ஆகிவிடுவதும் முழுநேரக்குடிகாரராக இருந்த சிலர் திருமணத்தின் பின் இவனல்லோ மனிதன் என்னுமளவுக்கு மாறிவிடுவதும் நாம் காணத்தானே செய்கின்றோம்.. யார் வாழ்க்கையில்தான் துன்பமில்லை? துணிவுடன் துன்பத்தை தூர விரட்டுவோர் மதுவுக்கு விலைபோவதில்லை. மதுவுக்கு மயங்குவதுமில்லை.

இவர்ளைக்கண்டு மது எப்போது தூர  ஓடுகிறதோ அப்போதுதான் இவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், சிரிப்பொலி கேட்கும்.

என் பணத்தில் நான் குடிக்கிறேன் அதைக் கேட்பதற்கு நீ யார் என வீராப்பு பேசுவோரை, தந்தை செல்வா கூறியதுபோல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

நடக்குமா?..  நடக்கவேண்டும்.

 

பொன் கந்தவேல்  –  கனடா

05.8.2014.

Last Modified: November 24, 2014