பசித்தவ(ரி)ன் பழங்கணக்கு

images (1)

வாழ்ந்து கெட்டவர் வரிசைக்கு வந்து விட்டவர், பழைய கதைகள் பலவற்றைத தம்முள்ளே பரிமாறிக்கொள்வதில்
பெரிதும் சுகங்காண்பர். அநேகமாக அந்திம காலத்தை அண்மித்துக் கொண்டிருப்பவர் தாம் இவ்விதமாகவும் ஆறுதலைத் தேடிக்கொள்வர்.
தமது சமகால அநாதரவு நிலையை, ஏதிலிகளாகப் பிறரை எதிர்பார்த்திருக்க வேண்டிய ஏக்கத்தை மற்றும் சுய இரக்கத்தை எல்லாம் மறக்கவும் மறைக்கவும் இதனூடே முயல்வர், மன ஓர்மத்துடனான சுய மரியாதையை இன்னும் இழக்கதிருக்கும் திட சித்தரே இதிற் சித்தி எய்துவர். தமது வீழ்ச்சியின் கர்த்தர் தாம் அல்லர் என்கின்ற தீர்க்கமான குற்றவுணர்ச்சி ஏதுமற்ற தன்னம்பிக்கை சார்ந்தே அவர் தம் போக்கு அமைந்திருக்கும்,
இந் நிலைப்பாடின் நியாய வலுவை , குறித்த நபரின் கடந்த காலத்து நடப்புகளை நன்கூன்றிக் கவனித்தறிந்து தெளீந்தவர்களால்தான் மதிப்பிட இயலும். எவ்வாறாயினும் இவர்களிற் பெரும்பாலனோர்க்கு உளவளத்துணை என்பது அவசியம் அதற்கு மேலாக சமூக ஒத்துழைப்பும் அத்தியாவசியமானதாகும்.
“காய்த்த மரம் தான் கல்லெறி வாங்கும்,”
என்பதில்லை, காயப்பட்டோ, நோயுற்றோ, முதுமையினாலோ ஊனமடைந்திருக்க கூடிய எந்தப்பிராணியும் கல்லெறிபடுவதற்குச் சாத்தியமுண்டு. ஆம், சிறுத்தைப்புலியின் வலிமையானது சிறுத்து விட்டால் , சிறு எலி கூட அதன் மீதேறிச் சிறுநீர் கழிக்கும், தான். இக் கூற்றுகள் நடைமுறையில் இயல்பானவைகளாக இருக்கலாம். மனிதாபிமான மிக்க மனிதரைப் பொறுத்தவரை, உகந்த மாற்று மார்க்கங்களினால் இந் நிலைகளை மாற்றி அமைக்க முடியும். முன்னர் “ சுற்றஞ் சூழ சுகபோக வாழ்வியற்றியவர்கள் இப்போது அன்றாட சீவனோபாயத்திற்கே அல்லாட நேர்வது, அவர்களின் முன்னைய துர் நடத்தைகள், கெட்ட சகவாசங்கள், ஊதாரிச் செலவினங்கள், வீம்பான ஆடம்பரங்கள், .. போன்ற பலவீனங்களின் விபரீத விளைவே! என எழுந்தமானமாக- ஒட்டு மொத்தத்தில் இவர்களை ஒதுக்கி வைத்தல் ஆகாது, ஏளனத்துடன் அணுகி அவமானப்படுத்துவதும் தகாது, மரத்தால் விழுந்தவரை மாடேறி மிதித்தாற்” போலவும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக”வும் அமையும்.
இப்படியான ஒருவரின் மரணம் நிகழ்ந்த பின் ஆர்ப்பாட்டமாகத் துக்கம் அனுட்டிப்பதிலோ, அஞ்சலி விழாக்கள் நடாத்துவதிலோ எந்த அர்த்தமுமில்லை, நடைப்பிணமாக வாழ்ந்த காலத்தில் அவரை அலட்சியப்படுத்திவிட்டு, பாடையில் உயிரற்ற பிணமாக “அது” பயணிக்கும்போது “கோடையின் நிழல் தருவாகத் திகழ்ந்தவரே இவர்” என்று கொண்டாடுகின்ற வரட்டுச் சம்பிரதாயங்களால் ஆகப் போவது தான் என்ன?
ஆதலால்….
இத்தகையோருக்கு உபகாரம் உவப்பதற்கு மனமோ இடமோ இல்லையெனில், உபத்திரவம் கொடுக்காது இவர்களை இவர்பாட்டில் இருக்க விடலாம். இன்னும் வற்றிப்போகாத ஈர நெஞ்சுடையோர் சிலரேனும் இவர்கட்குக் கைகொடுத்துதவக்கூடும்.
அதுவரை….
சொந்தத் தினவுகளைச் சொறிந்தவாறே இவர்கள் அதிற் கிறங்கட்டும்! ஆற அமர அமர்ந்து தமது பழைய காயங்களைத் தடவி ஆற்றியபடி அமைதியாய் உறங்கட்டும்!!.

இடைக்காடு இளைய பண்டிதன்.

Last Modified: July 8, 2015