ஊரோடு ஊராகி, உறவோடு உறவாகி, வாழ்வோடு வாழ்வாகி, நோயோடு போராடி நீங்காத் துயில் கொண்ட சோமு தணிகாசலம்.

Somu thani

எமது ஊர் சிறியதாயினும் பல பெரியோர் வாழ்ந்த, வாழ்கின்ற ஒரு பொன்னான பூமி. ஐம்பதுகளில் அறுபதுகளில் நாம் யார், எமது ஊர் எதுவென பெரிதாக வெளியே தெரியாத வேளையில் பல இளைஞர் அரச சேவையில் இணைந்து கொண்டனர். பலர் வாழ்வு தேடி வன்னிக்குப் போயினர். வாலிப மிடுக்குடன் இருந்த அவர்கள் அனைவருக்கும், நாம் உயர வேண்டும், நம்மவர் உயரவேண்டும் என்பதே தணியாத தாகமாய் இருந்தது. அதற்கு முன்னோடியாய், வழிகாட்டியாய் அப்போது செயற்பட்டவர் எமது சோம தணிதான்.அவர்களது செயற்பாடுகள் எம்மை வெளி உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டின.
தமது செய்கையால் தம்மை அடையாளம் காட்டி நிற்போரும் காலம் வரும் போது காலமாவது இயற்கையானதே. அத்தகையோர் பட்டியலில் இன்றும் ஒருவர் இணைந்து கொண்டார்.
சோம தணிகாசலம் என எம் அனைவராலும் அறியப்பட்ட எமதூர் சோமசுந்தரம் ஆசிரியரின் மகனாக 24.3.1942ல் அவதரித்த தணிகாசலம் அவர்கள் வவுனியாவில் வாழ்ந்து வரும் கால்18.01.2018ல் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவுசெய்து அமரராகிவிட்டார்.
தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து நில அளவைத் திணைக்களத்தில் பட வரைஞராக அரச சேவையில் இணைந்து கொண்ட அவர் தனக்காக வாழ்ந்ததை விட பிறருக்காக வாழ்ந்த காலமே அதிகமானது.
விவசாயக் கிராமமான எமதூரில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அரச சேவையில் சேர்வோர் கொழும்புக்கு சென்று அங்கு தங்கியிருப்பதற்கும் அவரது ஆலோசனைகளையும் உதவிகளையும் மறக்கமுடியாதவை. அரச அலுவலகங்களில் எவருக்கு ஏதாவது அலுவல் ஆக வேண்டியிருந்தால் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தணிகாசலம்தான். அவ்வாறு அனைவருக்கும் வேண்டிய உதவிகளை சலிப்பின்றி செய்துவரும் ஒருவராக அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவராகவே அவர் வாழ்ந்து வந்தார்.
ஒரு பட வரைஞராக இருந்ததாலோ என்னவோ அவரது முத்து முத்தான கையெழுத்தைக் கண்டு நான் அதிசயிப்பதுண்டு. நில அளவைத் திணைக்களத்தில் அவரைத் தெரியாத எவருமே இல்லை எனலாம். கீழ் மட்ட உத்தியோகத்தர் முதல் மேல் மட்ட உத்தியோகத்தர் வரை எவருடனும் நட்புடனும் அன்புடனும் பழகும் அவர் நிறையவே நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்டார்.
எமது வாழ்வில் எவருக்கு எப்போது என்ன நடக்கும் என்று எதுவுமே எமக்குத் தெரியாது.. தனது அரச சேவையின் ஓய்வின் பின் புத்தளத்தில் கடமையாற்றிய போது எதிர்பாராத வகையில் வீட்டில் ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கி பாரிசவாத நோய்க்கு ஆட்பட்டார். அதுவே பிற்காலத்தில் அவரை நிரந்தர நோயாளியாக்கிவிட்டது. எவருக்கும் உதவியேயன்றி எந்த தீமையும் செய்தறியாத அவருக்கு இப்படி வியாதி ஏற்பட்டது மிகவும் துரதிஸ்டமானதே.
தனது இல் வாழ்வின் அடையாளமாக நேசமிகு மனைவியையும் பாசமிகு இரு பிள்ளைகளையும் இவ்வுலகில் விட்டுச்சென்ற அவர் தான் வாழும் காலத்தில் அவர் செய்த நல்வினைகள் அவரை சொர்க்கத்தில் வாழவைக்கும்.
அவர் ஆன்மா அமைதி பெறுவதாக.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள்
பொன் கந்தவேல்
கனடா 19.1.2018