வாழ்வாங்கு வாழ்ந்த ஒரு மனிதர்

Velauthapillai

நூறு வயதுவரை வாழ்வது பெரிய விடயமல்ல. வாழும் காலத்தில் எப்படி வாழ்ந்தோம்,

என்ன செய்தோம் என்பதே பெரிய விடயம்.
அந்த வகையில் எம்மூரில் பிறந்து பல கஸ்டத்தின் மத்தியிலும் கல்விகற்று விவசாய இயந்திர பொறியியலாளராகி விவசாய பூமியாகிய எம் நாட்டுக்கும் எம்மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றிய திரு பொன்னையா வேலாயுதபிள்ளை அவர்கள் 17.4.2014 அன்று கனடாவில் காலமானார்.
அவர் தனது ஆரம்பக்கல்வியை இடைக்காடு மகாவித்தியாலயத்திலும் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியிலும் பின்னர் தனது உயர் கல்வியை கட்டுபெத்தை ஜேமன் இயந்திர தொழில் நுட்ப நிறுவனத்திலும் கல்விகற்று இயந்திர பொறியியலாளராக வெளியேறினார்.
இலங்கை விவசாயத்திணைக்களத்தில் பண்ணை இயந்திரப் பொறியியலாளராக தனது பணியை ஆரம்பித்த திரு வேலாயுதபிள்ளை அவர்கள் தனது திறமையாலும் புத்திசாலித்தனத்தாலும் விடாமுயற்சியாலும் மிக விரைவிலேயே உயர் பதவியை அடைந்ததுடன் பலராலும் விரும்பப்படும் பலராலும் அறியப்பட்ட ஒருமனிதராகி விட்டார். எவருடனும் நட்புடன் பழகும் அவர் விளையாட்டு, நாட்டியம், வித்தைவிளையாட்டு (Magic show) என பன்முக ஆற்றல்கொண்ட ஒருவராக விளங்கினார். விவசாயத்திணைகளத்தில் எதாவது விழாக்கள் நடைபெற்றால் அவரது நிகழ்ச்சியும் தவறாது நடைபெறும்.
எமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக நாட்டைவிட்டு வெளியேறி சில வருடங்கள் ஆபிரிக்காவின் சாம்பியாவில்(Zambia) பணிபுரிந்த அவர் பின்னர் கனடாவில் குடியேறி தனது மனைவியுடனும் இரு மகன்களுடனும் வாழ்ந்துவந்தார்.
கனடாவிலும் இவரது திறமையைத்தேடி பல பதவிகள் வந்தன. அதனால் ஒருகுறையுமில்லாது செழிப்பான வாழ்வு வாழ்ந்துவந்தார்.
தான் எப்படி வசதியாக வாழ்ந்தாலும் தனது இளமைக்காலத்தையும் தான் பட்ட கஸ்டங்களையும் தான் பிறந்த ஊரையும் என்றுமே அவர் மறக்கவில்லை. 2009ல் வன்னியில் ஏற்பட்ட கொடிய யுத்தத்தால் அனைத்தையும் இழந்து நிற்கதியான மக்களுக்கு, மீண்டும் அவர்கள் தம் தொழிலை ஆரம்பிபதற்கும் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் அடுத்தவருக்கும் தெரியாமல் அவர் ஆற்றிய உதவிகள் அளப்பரியன..
அண்மைக்காலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் இவ்வளவு விரைவில் எம்மைவிட்டுச்செல்வாரென நாம் நினைத்திருக்கவில்லை.
மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று.,
கடவுள் நினைப்பதுண்டு, பாவம் மனிதனென்று
ஆம், விதி மிக வலிமையானது.
அவர் ஆன்மா சாந்தி பெறட்டும்.

பொன் கந்தவேல்
இடைக்காடு, கனடா
18.4.2014

Last Modified: April 19, 2014