” அது ஒரு வித்தியாசமான சமர்க்களம்! சக மாந்தரால் உதைபட்டும் அவர் வார்த்தைகளால் வதைபட்டும் பதறித் தவித்தபடி பரிதாபப் பிறவிகள் சில உதவுவார் எவருமின்றி, தற்காத்துக் கொள்ளத் திறனுமின்றி குற்றுயிராய் கிடக்கின்றன. சுற்றி வர, சற்றுத்தொலைவில் ;கழுகுகள்; சில காத்துக் கொண்டிருக்கின்றன. அவசரம் காட்டாமலேயே, அவற்றிற்குத் தெரியும் துடிக்கும் உடலங்கள் கொஞ்சநேரத்தில் அடங்கி சடலங்களாய் தமக்கு விருந்தாக வாய்க்குமென்று.
இன்னொரு காட்சி…..!வீடு பற்றி எரிகிறது, பதைபதைத்தபடி வீட்டுரிமையாளர் அங்குமிங்கும் அலைந்து தீயை அணைப்பதற்கு முனைகின்றனர். அயலவர் ஆதரவு சிறிதேனும் கிடைப்பதாக இல்லை. அரைகுறையாக எரிந்து தணிந்த சம்பத்துக்களை அள்ளி அப்புறப்படுத்தி விட்டு விரக்தி மேலிட விலகிச் செல்கின்றார் அந்த வீட்டுக்காரர்.
இதற்க்காகவே காத்திருந்த மாதிரி ஒரு கும்பல் அகப்பட்டனவற்றை தேர்ந்து எடுத்துப் போகிறது .ஒருவன் சாவகாசமாக குறங்கொள்ளியெடுத்து சுருட்டுப் பத்தவைத்தபடி நடையைக் கட்டுகிறான். இவ்வாறான பிணந்தின்னிக் கழுகுகளும் எரிகிற வீட்டில் எஞ்சியதை அபகரிக்கும் அடாவடிக்கூட்டமும் இப்போதும் இல்லாமல் இல்லை. அப்பட்டமான சுயநலமும் அடுத்தவர் அவலங்களில் ஆதாயந்தேடும் அயோக்கியத்தனமும் தொடர்ந்து நிலவுகின்றன. தனிநபர் ஒருவருக்கு அல்லது குடும்பமொன்றிற்கு அவலங்கள் ஆரம்பிக்கையில் பாராமுகமாக இருந்துவிட்டு பின்னர்- அவை புரையோடிப்போய் கரைகாண முடியாத கட்டத்தை எட்டுகையில்- தமக்கு யாதேனும் இலாபம் கிட்டுமாயிருந்தால் மட்டுமே–அவசரமாகத் தலையிடுவது, சொந்தபந்தங்கள் எனச் சொல்லிக் கொள்வோரும் உண்டு.
இதில், தமக்குள்ளே போட்டியிட்டு ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள முனைவதும் நடக்கும், திருமண பந்தத்தினால் நெருக்கமான உறவுகள் மாத்திரமல்லாது, இரத்த உறவுகள்கூட இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல!. அனுதாபப்படவேண்டிய அந்த அபாக்கியசாலிகளின் பலவீனங்களை அளந்து அறிந்து, தமது ஆதிக்கத்தை அங்கு நிலைநாட்டிக்கொள்வதே இவர்களின் ஒரே குறிக்கோளாகும். அதே சமயத்தில் சம்பந்தப்பட்ட நெருக்கடிகளில் இருந்து அந்த உறவுகளை மீட்க வந்த மீட்பர்களாக தம்மை வெளிஉலகிற்கு விளம்பரப்படுத்தவும் செய்வர். தொடக்கத்திலிருந்தே துயரங்கள் தொடர்கையில்,; நம்மளுக்கென்ன? என்று தூர விலகி நின்ற இவர்கள்; இப்படியாக இச்சொந்தங்கள் நொடித்துப்போகும் என்று முன்பே தெரியாமல் போய்விட்டதே!; என்றவாறு நயவஞ்சகமாக நடித்தும் கொள்வர். ”
உண்மையில்- பாதிக்கப்பட்டவரின் மனநிலை பற்றியோ, அவர்களின் எதிர்காலம் குறித்தோ எள்ளளவும் அக்கறையற்று, இப்போது -தாம் உண்டு தம்பாடு உண்டு எனத் தமது கருமங்களையே கவனித்துக் கொண்டிருப்பர். இத்தகையோரின் எண்ணப் பாங்கினைப் பற்றி ;அண்ணை எப்போ சாவார், திண்ணை எப்போ காலியாகும்?; என்று அனுபவ அறிவில்லாமலா அன்று சொல்லி வைத்தார்கள்!;
இடைக்காடு இளைய பண்டிதன்.