இடைக்காடு மகாவித்தியாலயம் பழையமாணவர் சங்கம்– கனடா, குளிர்கால ஒன்றுகூடல், 26.12. 2016
மாரிகாலம், கனடாவுக்கே உரித்தான கடும் குளிர். வெளியே எங்கேயும் போக மனம் மறுக்கும். என்றாலும் அங்கே போவோம் என மனம் சுண்டி இழுக்கும். அதுதான் எங்கள் மாரிகால ஒன்றுகூடல் நிகழ்வு.
விட்டகுறை தொட்டகுறையாக நாம் கல்விகற்ற, எமக்கு கல்வியூட்டி எம்மை நிமிர வைத்த இடைக்காடு மகாவித்தியாலயத்தின் பழையமாணவர்களாகிய நாம் புலம் பெயர்ந்து கனடா வந்தாலும் நாம் பிறந்து வளர்ந்த ஊரையும் கல்விகற்ற பாடசாலையும் மறக்காது 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா வாழ் இடைக்காடு பழைய மாணவர் சங்கம் இன்றைய ஆண்டு தனது இருபத்தைந்து ஆண்டைத் தொட்டு நிற்கிறது. ஆம் ஒரு கால் நூற்றாண்டைக் கடந்து வாலிப மிடுக்குடன் தன் பணியைத்தொடர்ந்து நிற்கிறது.
சங்கம் ஆரம்பித்தகாலத்தில் நாம் குழந்தைகள், வாலிபக்குழந்தைகள். அப்போதெல்லாம் எமது பாடசாலைக்கு எப்படி உதவலாம் எமது பங்களிப்பு எப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் சிந்தித்தோமேதவிர ஒன்றுகூடல் நிகழ்வினை நடாத்தும் நோக்கம் இருக்கவில்லை. எனினும் நாம் அந்நிய தேசம் வந்தாலும் இங்கு நாம் சிதறி வாழ்ந்தாலும் எம்மிடையேயான உறவு அந்நியப்பட்டுவிடக்கூடாது என்னும் நோக்கில் கோடையிலும் மாரியிலும் ஒன்றுகூடல் நிகழ்வினை நடாத்தத் தீர்மானித்தோம். அந்த ஆரோக்கியமான நிகழ்வுக்கு வழிசமைத்தது எமது பழைய மாணவர் சங்கம்தான்.
கோடைகால ஒன்றுகூடல் திறந்தவெளி அரங்கில் சிறுவர் பெரியோரின் மெய் விளையாட்டுடன் உணவு உண்டு பேசி மகிழ்வோம். மாரிகாலத்தில் பெரியதோர் மண்டபத்தில் கதவைச் சாத்தி குளிருக்கு வேலிபோட்டு ஆடல் பாடலுடன் அறுசுவை உணவை உண்டு பேசி மகிழ்வோம். முன்னையது எமது நிலத்து நிகழ்வாகவும் பின்னயது எமது புலத்து நிகழ்வாகவும் அமைகிறது.
தாயக மண்ணில் கல்வியிலும் பேர் புகழிலும் கொடிகட்டிப்பறக்கும் பல பாடசாலைகள் இங்கு தமது நிகழ்வுகளை வருடாவருடம் நடாத்தி வருகின்றன. மிகவும் சிறிய ஊரிலிருந்து புலம்பெயர்ந்து வந்த நாங்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்களல்ல என்னும்படி எம்நிகழ்வுகளை வருடாவருடம் நடாத்திவருவதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.
நேற்றுப்போல் இருக்கிறது, காலம் என்னமாய் ஓடிவிட்டது. எமக்கு இளமை திரும்பப்போவதில்லை.. நாம் இனிப் பள்ளி செல்லப்போவதில்லை. வாழ்விலொருமுறையே வரும் பள்ளிவாழ்க்கை மறக்கமுடியாத ஒன்று. அதை எண்ணி எண்ணி இருபத்தந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இது எம் வாழ்வில் கனதியான ஓர் ஆண்டு. சிறப்பாக கொண்டாடவேண்டிய ஒரு நிகழ்வு. அடுத்த இருபத்தைது ஆண்டு முடிவில் பொன்விழா கொண்டாடலாம்.. அதற்கு நாம் இருப்போமா இந்த எமது சங்கம் இதே துடிப்புடன் செழுமையுடன் இயங்குமா இருந்தாலும் அதன் செயற்பாடுகள் எப்படி இருக்கும் என எம்மால் கற்பனைசெய்து பார்க்கமுடியவில்லை.
சொல்வார்கள், கடந்தகாலம் முடிந்த கதை, எதிர்காலம் எப்படியிருக்குமென்று எவருக்கும் தெரியாது, நிகழ்காலமே நிச்சயமானது. உயிருள்ளது. இதைவிட்டால் இப்படி ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைக்காது.
இதைச் சிந்தித்துத்தான் திறம்படக் கருமமாற்றி வருகின்றோம். முக்கியமாக மலர் வெளியீடு. எம்மோடு எம் பாடசாலையோடு எம்மூரோடு சம்மந்தப்பட்ட பலரும் மலரின் உருவாக்கத்துக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார்கள். குறைவான விளம்பரத்துடன் நிறைவான ஆக்கங்களுடன் அம்மலர் வெளிவருகின்றது.
ஆணும் பெண்ணும் சமமானவர்களே. ஆணுக்கு பெண் எவ்வகையிலும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இவ்வாண்டுக்கான செயற்குழுவில் தலைவர் செயலாளர் உட்பட அனைவருமே பெண்கள். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்களே. அதை மாற்றி நம் பெண்களின் வெற்றிக்குப் பின்னால் ஆண்களும் இருக்கிறார்கள் எனும்போது நாம் அனைவருமே பெருமைப்படலாம்
நிகழ்வு வழமைபோல் கலைநிகழ்வுகளுடனும் விசேட நிகழ்வாக எம்மண்ணில் எமக்குக் கல்வியூட்டி இன்றும் இங்கு எம்முடன் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள், தாயகமண்ணில்பழைய மணவர்சங்கத்தை உருவாக்கி கட்டிவளர்த்து இங்கு எம்முடன் வழ்ந்துவருவோர், வயதில் முதிர்ந்த இங்கு வாழும் பழைய மாணவர் என்போரையும் விழா மேடையில் கெளரவிக்கவுள்ளோம்.
கடந்த கால ஒன்றுகூடலின்போது பலவித வசதியீனங்கள் காரணமாக பலர் மாரிகால ஒன்றுகூடலின்போது கலந்துகொள்ளாமலிருக்கலாம். இம்முறை இம்முக்கிய விழாவில் கலந்துகொள்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதை அன்புடனும் தயவுடனும் கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்வில்வெளியிடப்படும் மலரை நீங்களும் படியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள். அவர்களே எதிர்காலத்தில் புலம்பெயர்ந்த மண்ணுக்கும் எம் தாயகமண்ணுக்கும் பாலமாகத் திகழப்போகிறவர்கள்.
மொன்றியால் வாழ் உறவுகளுக்கும் வேறு வெளிநாடு வாழ் அன்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள், நீங்கள் டொரோண்டோ வர உத்தேசித்திருந்தால் இந்நிகழ்வு நடைபெறவுள்ள 26.12.2016 ம் திகதியை அண்மித்து வந்தால் இந்நிகழ்விலும் கலந்துகொள்ளலாம்.அதனால் மகிழப்போவது நீங்கள் மட்டுமல்ல., நாங்களும்தான்.விழாவன்று அனைவரையும் காண்போம், கூடி மகிழ்வோம்.
அன்புடன்,
செயற்குழு உறுப்பினர்கள்
08.11.2016
குறிப்பு
நிகழ்வில் பங்குபெறவிரும்புவோர் நிகழ்வின் இருவாரத்துக்கு முன்பதாகவே தமது வருகையை தெரியப்படுத்தினால் அது எமது உணவுத்தேவையை நிர்ணயிக்க உதவியாக இருக்கும் ஆம், உங்கள் வருகையை கீழுள்ள ஒருவருக்கு தெரியப்ப்டுத்துங்கள்.
சிவரூபி செல்வராஜ்- 905-796-3294 / 647-280-4281
சத்தியா உதயணன் : 416-671-7146 / 416-724-7471
தெய்வம் சிவஞானரூபன் : 647-923-6523 / 416-286-6567