Articles for February 2022

இயற்கை சார்ந்த வாழ்க்கை கொண்டாட்டமானது….by :Siva Murugupillai

இயற்கை சார்ந்த வாழ்க்கை கொண்டாட்டமானது……

வீட்டிற்று ஒரு ஆடு, அதனுடன் கூடிய இரண்டு மூன்று குட்டிகள்….. கூடவே இரண்டு கறவை பசுக்கள் அதன் கன்றுகள்…… நான்கு, ஐந்து கோழிகள்……. செல்லப் பிராணிகளாக நாய், பூனைகள்…வளவிற்கு மூன்று தனியான வீடுகள்(நித்திரை கொள்வதற்கு மால் வீடு, சமையலுக்கு அடுப்படி, கழிப்பிடமாக கக்கூசு) அவை கொட்டிலாகவும் இருக்கலாம் கோபுரமாகவும் இருக்கலாம்… தற்போது இவை எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டுவிட்டன…? வளவை சுற்றி வேலி. தளிர்.. பூ… இலை… குழையாக, காய் கனியாக, அவை சொரியும் பழுத்த இலைகள். ஆடு, மாடு பாலும் தரும், புழுக்கையும் தரும், மாடுகளும் அவ்வாறே சாணகமும் சலமும் தரும்.இவை எல்லாம் சேகரிக்கப்பட்டு ஒரு ஆயிரம் கண்டு(ன்று) அல்லது கால் ஏக்கர் தோட்டதிற்கு ஒரு வருடத்திதற்கு தேவையான இயற்கை பசளையை உருவாக்க முடியும். குடும்பம் ஒன்றிற்கு 30 மாடுகள் வரை அதுவும் தோட்டத்தில் அதிகம் பயிர் செய்கை பண்ணாத மாரிகாலத்து ஆவணி மாதம் தொடக்கம் மார்கழி முடியும் வரை தறையில் தோட்டத்தில் எருக்கட்டுதல் என்ற முறையில் ஒரு இரண்டாயிரம் கண்டு வரை எருக்கட்ட முடியும்….யாழ்ப்பாண பயிற்செய்கை நிலத்தில்.இந்த எருக்கட்டல் நெற்செய்கை நிலத்தில் மழையற்ற காலத்தில் செய்யப்படும்.அதனால்தான் இந்த மாடுகள் மாரியில் மரக்கறிச் செய்யப்படும் இடங்களிலும்… கோடையில் நெற்செய்கை செய்யப்படும் இடங்களலும் மாறி மாறி பராமரிக்கப்படும் ஒரு கூட்டுறவு மேய்ச்சல் சுழற்சிகள் இருந்தன. இதனை விட விதைத்த சணலும் வேலியில் வெட்டும் குழைகள் மேலதிகமாக அதிகம் குழைகள் உள்ள வேறு இடங்களில்(குழைக்காடுகள் என்று அழைப்பர்) சிறப்பாக பூவரசமரக் குழையும்… வேப்பு இலையும் இன்னும் பலவுமாக என்று தோட்டத்து தறையில் தாழ்த்தல் என்று போனால் மொத்தம் 4 ஆயிரம் கண்டு வரை இயற்கை பசளை பெற்றுவிடலாம்.மிகுதியாக உள்ள அல்லது குறை நிரப்பாக வன்னியில் இருந்து வரும் ஒரு லொறி லோட்டு எருவை வாங்கி தறையிற்கு பரப்பி விட்டால் ஒரு வருட விளைச்சலுக்கான இயற்கை பசளைளை பெற முடியும். மொத்தம் ஐயாயிரம் கண்டு(தோராயமாக ஒரு ஏக்கர்) தோட்டம் வைத்திருந்தவன் பத்துப் பிள்ளை பெத்திருந்தாலும் அரசாளுவான் என்பார்கள் அந்தக் காலத்தில் விவசாய பூமியில். இதுவே வானம் பார்த்த பூமியான வன்னி, கிழக்கில் என்றால் ஒரு ஐந்து ஏக்கர் நஞ்சை… புஞ்சை நிலம் என்றால் போதுமானது.உரமற்ற…. இரசாயன உரமற்ற இயற்கை விவசாயம் செய்து போதியளவு விளைச்சல் பெற்ற தோட்டச் செய்கை… கமச் செய்கை… இவை இருந்தால் அக்காச்சிமாருக்கும், தங்கச்சிமாருக்கும் ‘சீர்’ செய்து கொடுத்து கல்யாணமும் கட்டி வைக்கலாம்… செய்தும் வைத்தார்கள்.என்ன கேட்கவே ஆனந்தமாக இருக்குதா….? அதுவும் இலங்கை அரசாங்கம் இரசாயன உரங்களை தடை செய்த பின்பு இவ்வாறு செய்தும் தோட்டத்தை… கமத்தை… சாப்பாட்டிற்கு தேவையானவற்றை வாழ்க்கையை செழுமைப்படுத்தலாம் என்று எண்ணத் தோன்றுகின்றதா…? உண்மை… அவ்வளவும் உண்மை.இவை எல்லாம் நான் சிறுவனாக இருந்து போது… 50 வருடங்களுக்கு முன்பு கண்டவை. பசுமையாக இனிமையாக நஞ்சற்ற வாழ்வை கண்ட இளமை ததும்பும் வாழ்க்கை அது. காதல் வாழ்க்கை கிடுகு வேலியிற்கால் கண்களும் கண்களும் சந்தித்து கனி மொழி பேசி காதல் செய்த வாழ்க்கை அது. என்ன பின்னோக்கி ஓடச் சொல்லுகின்றீர்களா..? என்றால் பின்னோக்கி என்பதை விட முன்னோக்கி ஓடுங்கள் என்கின்றேன்…!1987 சோவியத்தின் உடைவிற்கு பின்பு அதுவரை காலமும் கியூபா சோவியத்தின் உதவியுடன் தனது உணவிற்கான மரக்கறி போன்றவற்றை இரசாயன உரங்களை பாவித்து செய்கை பண்ணியதில் இருந்து ‘… இனி கியூபா அவ்வளவுதான்…’ என்ற போது….பிடல் காஸ்ரோ தனது நாட்டை சுய உற்பத்தி மூலம் அதுவும் இயற்கை விவாசாய மூலம் பழைய முறமையிற்கு திரும்பி முன்னோக்கி நகர்ந்து இன்றுவரை தாங்குப் பிடித்து தன் நிறவை நோக்கி பயணிப்பதை வரலாற்றில் நாம் கண்டு கொண்டிருக்கும் உண்மையாக எம் கண் முன்னே விரிகின்றது. இதனையும் நாம் எமக்கு பாடமாக கொள்ளலாம்தானே.முதன் முதலில் செயற்கை இரசாயன உரத்தை எங்கள் தோட்டத்திற்கு போட்டது இப்போதும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது. அது வரை செயற்கைப் பசளை, இரசாயன உரம் என்று ஏதும் தோட்டத்திற்கு பாவிக்கில்லை. பசளையாக பாவித்தவை இந்த பதிவின் ஆரம்பத்தில் கூறியுள்ள முறமைகளே. இந்த இயற்கை பசளையை உருவாக்குவதற்குரிய ஆடு, மாடுகள், பண்ணை மாடுகள், பட்டி செம்மறி ஆடுகள், வேலியின் குழையும் குறை நிரப்பியிற்கு சணலும் வன்னியில் இருந்து வரும் எருவும் என்றாகிய ஒழுங்கு முறைகளை கொண்டிருந்த வாழ்கையை குழப்பியவர்களே இன்றைய இரசாயன பாவனையை அன்று அறிமுகப்படுத்தி ஊக்கிவித்தவர்களே. மக்களும் அதிக விளைச்சல் ‘எகிறும்’ என்று அதற்குள் வீழ்ந்தும் விட்டனர் காலப் போக்கில் இந்த நிலங்கள் மலடாகிவிடும் என்ற புரிதல் அவர்களுக்கு இருக்கவில்லை. உணரும் போது நிலங்கள் செத்தும் விட்டன…?இன்று இரசாயன உரத்தை தடை செய்து இயற்கை… சேதன பசளைகளை பாவியுங்கள் என்று திடீரென தடை போட்டத்தினால் விவசாயிகளுக்கு… விவசாயத்திற்கு ஏற்பட்ட திடீர் அவலங்கள், விளைச்சல் குறைவுகள் புரியப்பட வேண்டும். இயற்கைப் பசளையை போதியளவு உருவாக்குவதற்குரிய கால அவகாசங்கள், புதிய நவீன முறமைகளை உருவாக்காமல் இதனைச் செயற்படுத்த முற்பட்ட போது இந்த இயற்கை விவசாயத்தின் மீதும் அதனை அறிமுகப்படுத்திய அரசு(அரசின் செயற்பாட்டை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு விடயங்களைப் பற்றி பேசவே இந்த பதிவு முனைகின்றது) மீதும் வெறுப்பும் எதிர்ப்பும் ஏற்பட்டுப் போகும் இதில் எனது கவலை அருமையான இயற்கை விவசாயம் என்ற விடயம் அடிபட்டுப் போகும் என்பதே ஆகும். பதிவின் ஆரம்பத்தில் கூறிய ஒழுங்குகளை தற்போதைய நவீன முறைகைளை உள்வாங்கி மீள் உருவாக்காமல் திடீரென இரசாயன உரத்தை தடைசெய்தல் சரியான முறமை அல்ல. அவசரப்பட்ட செயற்பாடு என்ற விமர்சனத்தில் நியாயங்கள் இல்லாமல் இல்லை.இயற்கை விவசாயம் மிகவும் நல்ல கொள்கை முடிவு. அது நஞ்சற்ற உணவுப் பொருட்களைத் அதிகம் உற்பத்தி செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.ஆனால் எம்மால் இயற்கை பசளையுடன் விவசாயம் செய்த காலத்து நிலமைகளை எற்படுத்த வேண்டும். இதனை உடனடியாக செய்ய முடியுமா என்றால் சற்றுக் கடினமதான் ஆனால் செய்தாக வேண்டும். இதனை அரசும் செய்ய வேண்டும் இதனை விவசாயமும் செய்யும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் அதனை மீண்டும் நடை முறைப்படுத்த முயல வேண்டும். கூடவே ஊருக்கு இரண்டு மூன்று செம்மறி ஆட்டுப் பட்டிகளை விவசாய நிலத்திற்கு பசளைகக்காக அடைப்பதற்கு ஏற்ப முன்பு இருந்ததைப் போல் உருவாக்க வேண்டும். இவை முன்னு அதிகம் இருந்து தற்போது காணாமல் போய்விட்டன. இவற்றிற்கான மேய்ச்சல் நிலங்களும் இருந்தன.கூடவே இயற்கை விசாயத்தின் தந்தை நம்மாள்வார் போன்றவர்களால் இயற்கை பசளை உருவாக்கும் முறமைகள் பூச்சி தடுப்பு முறைகள் மேலே கூறிய முறமைகளுக்கு அப்பால் உருவாக்க வேண்டும்.அப்படிச் செய்தால் சீனாவிடம் இயற்கை பசளையை எதிர்பார்க்கவும் வேண்டாம்..? அதனுடன் சேரந்து வரும் தேவையற்ற பக்றீரியா எமது மண்ணுக்கு கேடு விளைவிக்கும் என்று கடலில் கப்பலைத் தடுத்து வைத்து திருப்பி அனுப்புவதும் அதன் தொடர்சியாக மக்கள் வங்கி சிவப்பு பட்டியலில் போடுவோம் என்ற மிரட்டலும் ஏற்பட வாய்புகள் ஏற்படாது. கூடவே இறுதியில் மக்கள் வங்கி இலங்கை அரசு பணிந்து 6 மில்லியன் டாலர் வரை வாங்காத பசளைக்கு தண்டம் கட்டவேண்டிய நிலமையும் ஏற்பட வாய்பும் ஏற்படாது.சிறுவயதில் படிப்பில் கவனம் செலுத்துவது குறையும் போது எனது தாய் தந்தையர் எம்மை ஏசுவர் ‘….இப்படியே போனால் பிறகு ஆடு மாடுதான் மேய்க்க வேண்டி வரும்…’ என்று. நான(ம்) ஆடு மாடு மேய்துவிட்டுத்தான் படித்து இன்றுள்ள நிலமைiயிற்கு வந்தேன்(தோம்). அன்று அவர்களின் கூற்றிற்கு முரண் நகையாக இருந்தாலும் இன்று அந்த ஆடு மாடு மேய்த்து பட்டி அடைத்து கொடுப்தே இயற்கை பசளையை தேடி அலையும் வன்னி, கிழக்கு பெரும் நிலப்பரப்பு 5 ஏக்கர் விவசாயிகள் தேடித்திரியும் அதிகம் கிராக்கியுள்ள தொழிலாக மாறியுள்ளது. பாருங்கள் கால மாற்றம் அம்மா அப்பா அன்று கூறிய ‘ஆடு மாடு மேய்க்கப் போகின்றாய்….’ என்று ‘மட்டமான” பொருளாதார மலினத் தொழிலாக பார்க்கப்பட்டது இன்று கிராக்கியான தொழில் முறையாக மாறியுள்ளதை.நிலத்திற்கு மேலே நீரைச் சேகரித்து வைத்தால் அதனை வயல் வரப்பு என்போம் நிலத்திற்கு கீழே நீரை சேகரித்தி வைத்தால் அதனை குளம் குட்டை என்போம் நீருக்குள் அமிழ்ந்திருந்தும் விதையில் இருந்து முளைத்த பயிராக பயன் தரும் ஒரே ஒரு பயிர் நெல்லுதான். ஏனையவை சில நாட்கள் நீர் தேங்கினால் அழுகி செத்துவிடும். இந்த பூமிக்கு மேலாக இருக்கும் நீர் பூமியின் வெப்பத்தாலும் சூரியனின் வெப்பத்தாலும் ஆவியாகி கரு மேகம் ஆகி மீண்டும் மழையாக நீரைத் தரும் சுழற்சிதான் மழை இதற்காக மனித குலத்தால் உருவாக்கப்பட்ட பயிரே நெல்லு என்பார்கள்.நீரையும், இயற்கை நமக்கு தரும் பசளையும் உருவாக்கி மனித குலம் வாழ்வதற்கான உணவுகளை உற்பத்தி செய்து இன்றைய காலத்து உணவுப் பொருட்களின் பற்றாக் குறையில் இருந்து மனித குலத்தை மீட்டு எடுப்போம். வாழ்க்கை கொண்டாட்டத்திற்குரியது. அது எல்லோருக்குமானது. (நன்றி: புகைப்பட உதவி எனது நட்பு ஜெயபாலன் நல்லதம்பி)