காலத்தை வெல்வோம்

images

விரும்பியோ விரும்பாமலோ 12 மாத வயதுடைய 2014ம் ஆண்டு எம்மைவிட்டுப் போய்விட்டது. 2015ம் ஆண்டு பச்சைக் குழந்தையாக எம்முன்னே சிரித்து நிற்கின்றது.
காலம் என்பது என்ன?
காலம் என்பது கடந்துபோவது, கரைந்து போவது, எம்மால் கட்டுப்படுத்த முடியாதது.
சொத்து என்பது என்ன?
சொத்து என்பது எம்மிடம் உள்ளது, அது எம்மைவிட்டுப்போவதும் எம்மிடம் தங்கி இருப்பதும் எம் கையில்தான் தங்கியுள்ளது.
எம்வாழ்வில் எமக்களிக்கப்பட்ட விலை மதிக்கமுடியாத சொத்து எது?
அதுவும் காலம் தான்.
நூறு ரூபாயுடன் கடைக்குப் போகிறோம். வெளியே வரும்போது அந்தப்பணத்தை இழந்துவிட்டு வருகின்றோம். ஆனால் அதற்குப்பதிலாக சில பொருட்டளை வாங்கிவருகின்றோம். சிலர் நூறு ரூபாவுக்கு மேலான பொருட்கள வாங்கிவருகிறார்கள். சிலர் நூறு ரூபாவுக்கு குறைவான பொருட்களை வாங்கிவருகிறார்கள். சிலர் லொத்தர் சீட்டு எடுத்துவிட்டு எதுவுமின்றி வெறும் கையுடன் வெளியே வருகிறார்கள்.
எம்வாழ்வின் ஒருவருட காலத்தை நேற்றுடன் இழந்துவிட்டோம். அதற்குப்பதிலாக என்னத்தைப் பெற்றுக்கொண்டோம்? பணத்தையா? பேர் புகழையா? அனுபவத்தையா? பிள்ளைகளையா? பேரப்பிள்ளைகளையா? அல்லது எதுவுமே இல்லையா?
அது அவரவர் திறமையைப்பொறுத்தது.
இம் மண்ணில் நாம் உயிருடன்பிறக்கும்போது எம் வாழ்க்கைக்காலம் என்று 80 தோ, 90 றோ 100 றோ என்று சில வருடங்கள் பரிசாக, சொத்தாக எமக்கு வழங்கப்படுகின்றன .நாம் முதல் மூச்சு விட ஆரம்பித்தவுடனேயே எம் வயது கரைய ஆரம்பித்துவிடுகின்றது.
எமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கைக்காலத்தில் எதையெல்லாம் செய்தோமோ, எதையெல்லம் சாதித்தோமோ அவைதான் நாம் வாழ்ந்ததன் அடையாளங்கள். காலம் எம்மைக்காவுகொண்டபின்பும் எம்மை உயிர்வாழவைப்பது அந்த அடையாளக்களே.
வெறுங்கையோடு வந்தோம், வெறுங்கையோடு போகிறோம் என்கிறார்களே, உண்மை அதுவல்ல.
நாம் இங்கு வரும்போது, வாழ்க்கை என்னும் வீட்டில் நுளையும்போது வாழ்க்கைக்காலம் என்னும் பெறுமதியான சொத்துடன் உள்ளே வந்தோம். திறமைசாலிகள் செல்வச்செளிப்புடனும் பேர் புகழுடனும் உலகைவிட்டுப் போகிறார்கள். சிலர் சோம்பேறிகளாக எதையுமே செய்யாமல் எதையுமே சாதிக்காமல் வாழ்க்கைக்காலத்தை வெறுமனே கரைத்துவிட்டு அடையாளமே தெரியாமல் போய்விடுகிறார்கள். ஆக மொத்த்தில் வெறுக்கையுடனா அல்லது நிரம்பிய கையுடனா போகிறோமென்பது அவரவர் செய்கையைப்பொறுத்தது, வாழும் காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பொறுத்த்து.
வாழ்க்கையே ஒரு கபடிவிளயாட்டுத்தான். காலம் எம்மை வெல்லப் பார்க்கிறது, நாம் காலத்தை வெல்லப்பார்க்கிறோம். காலம் எம்மை வென்றுவிட்டால் நாம் காணாமல் போய் விடுகிறோம். நாம் வென்றுவிடால் காலம் நம் காலடியில் கட்டுண்டு கிடக்கிறது.
வாழ்க்கை ஒரு சூதாட்டம் என்றும் கூறுவார்கள்.
நீங்கள் சூதாட்ட விடுதிக்குப் போயிருக்கிறீர்களா? சூதாட்டவிடுதிக்குள் நுளையும்போது உங்களுக்கு ஒரு சதம்கூடத் தேவையில்லை. சூதாட்ட்தை ஆரம்பிப்பதற்குரிய பணத்தை அவர்களே தருவார்கள். அபோது அதுதான் தங்களை மாட்டவைக்கும் தூண்டில் என்பதை அவர்கள் உணர்வதில்லை. 99 வீதமானோர் அவர்களுக்குக்கிடைத்த பணத்தியும் இழந்து தமிடமுள்ள பணத்தையும் இழந்து, போர்களத்திலிருந்து வெறும் கையுடன் திரும்ம்பிய இராவணன்போல் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு திரும்பிவருவார்கள். அருமையிலும் அருமையாக ஒரு சிலர்தான் அவர்கள் தந்த பணத்துடன் உள்ளதையும் சுருட்டிக்கொண்டு தூண்டில் உணவையும் தின்றுவிட்டு அதனையும் அறுத்துகொடு ஓடும் மீன் போல கம்பீரமாக வெளியே வருவார்கள். இவர்கள் அதிஸ்டசாலிக|ள். முயற்சியாளர்கள் முயற்சியுள்ள அதிஸ்டசாலிகள்.
அதிஸ்டத்தைவிடுங்கள். முயற்சியாளர்கள் என்றுமே தம் வாழ்வில் சோடைபோவது இல்லை. மெய் வருந்தக்கூலி தரும் என்பதற்கிணங்க காலம் கடந்தாயினும் பலன் வந்தே தீரும்.
இன்று எம் வாழ்வோடு இணைந்துவிட்ட இணையத்துக்கு வாருங்கள். Rich India ,என்னும் இணய தளத்தின் தாபகர் திரு அருளானந்தின் இமாலய வளர்ச்சியைக்கண்டு நான் பிரமித்துப்போனேன். நீங்களும் அவசியம் பாருங்கள்.
காலத்துடன் போராடி நாம் காலமாகும்போது நம் உடலை அக்கினி தின்றுவிடுகின்றது. ஆனால் நாம் வாழும் காலத்தில் நாம் பெற்ற பேரும் புகழும் காலம் கடந்தும் நிலைத்திருக்கும் அவை அக்கினியால் அழிவதிலை.
இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவன்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்
என்னும் வாலியின் கவி வரிகளுக்கேற்ப, முயற்சியைத் துரத்திப்பிடிபோம், சோம்பலை துரத்தியடிப்போம், சாதனையாளர் பட்டியலில் நாமும் இடம் பிடிப்போம்.
2015 ம் ஆண்டு காலமாகும்போது, நாம் காலமாகாமல் நிமிர்ந்து நிற்போம்.
இது சாதனை அல்லவா?

பொன். கந்தவேல் – கனடா
10.1.2015