மண்ணில் பிறந்து மாண்புற வாழ்ந்து,

மண்ணில் பிறந்து மாண்புற வாழ்ந்து, மண்ணோடு மண்ணாகி……………

Mr Nagamuthu Subramaniyam

ஈழ மண்ணில் பிறந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவரும்கால் 22.11.2017 அன்று சிவபதமடைந்த அமரர் நாகமுத்து சுப்ரமணியம் அவர்கள் பற்றிய நீங்காத நினைவுகள்….
இன்று எம்மிடையே வாழ்ந்துவரும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில மூத்த முன்னோடிகளில் ஒருவராக நேற்றுவரை வாழ்ந்து வந்த திரு நாகமுத்து சுப்ரமணியம் எம்மை விட்டுப் பிரிந்தது அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல எம்மூருக்கும் எம் சமுதாயத்துக்கும் பாரிய இழப்பாகவே நாம் கருதுகின்றோம்.
24.2.1926 அன்று எமது தாயகமான இடைக்காட்டில் அவதரித்து அங்கேயே கல்வி கற்று ஓர் அரச உத்தியோகத்தராக தன் வாழ்வினை அமைத்துக் கொண்ட அவர் எமதூரில் தமது உறவினரான சிவகாமிப்பிள்ளை என்பவரை தன் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு சீரிய சிறப்பான இல்லற வாழ்வின் அறுவடையாக ஏழு மழலைகளைப் பெற்றெடுத்தார். பொறுப்புமிக்க ஓர் குடும்பத் தலைவனாக தனது அத்தனை பொறுப்புகளையும் நிறைவேற்றி தன்னைப் போன்று தன் சிறார்களையும் சமூக முன்னோடிகளாக வளர்த்தெடுத்தார்.
தன் குடும்பத்தில் மட்டுமல்ல எமதூரின் பாடசாலை வளர்ச்சியிலும் பற்றுக்கொண்டு தன்னாலான அத்தனை பங்களிப்பையும் மேற்கொண்டு ஓர் சமூக அக்கறையுள்ள குடிமகனாகவும் வாழ்ந்து வந்தார்.
காலம் ஓடியது. எமது தாயகத்தில் நாட்டுப் பிரச்சினை நாழுக்கு நாள் மோசமாகி வந்தது.பலரும் புலம்பெயர்ந்து மேலைத் தேசத்துக்கு குடிபெயர்ந்தனர். அவரும் புலம்பெயர்ந்து கனடாவில் தனது பிள்ளைகளுடன் இணந்துகொண்டார். இங்கு வந்திருந்தாலும் தாயகத்துடன் உள்ள உறவுகளுடனும் ஊருக்கு வேண்டிய உதவிகளையும் மேற்கொண்டு வந்தார்.
புலம்பெயர்ந்த எமதூர் மக்களில் அதிகளவானோர் கனடாவில் தங்கியிருந்ததாலும் உள்நாட்டுப்போரின் காரணமாக அம்மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டும் உள்ளதனாலும் தாயகத்து மக்களுக்கு பொருளாதர உதவியையும் குறிப்பாக பாடசாலை அபிவிருத்திக்கு இங்கு பழைய மாணவர் சங்கத்தினை உருவாக்கி அதன் மூலம் பாடசாலை அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை செய்வதற்கு இவரின் புத்திரர்களும் முன்னோடிகளாகத் தந்தை வழி நின்று, ஏன் அவரைவிட சிறப்பாகச் செயற்படுவதைக்காணும்போது,
தந்தை மகற்றாற்று நன்றி வையத்து முந்தி இருப்பச் செயல் என்பதுபோல் அவ்வாறே
மகன் தந்தைகாற்று முதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல்
என்றவாறு இம் மண்ணிலும் தந்தையும் அவர் தம் மக்களும் இங்கும் மற்றையோருக்கும் முன்னோடியாக திகழ்கின்றனர்.
அது மட்டுமன்றி எமது தாயகத்தில் பாடசாலை கணணிப்பிரிவு, ஊர் விளையாட்டு மைதானம், அண்மையில் தாபிக்கப்பட்ட நம்பிக்கை நிதியம் அதன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் முதலிய நடவடிக்கைகள் இவர் தமது பிள்ளைகளை எவ்வாறு நெறிப்படித்தியுள்ளார் என்பதை எமக்குக் காட்டி நிற்கின்றன.
பிறப்பு எப்படி இயற்கையானதோ மரணமும் அவ்வாறு இயற்கையானதே.
தான் பூரணமான வாழ்வை வாழ்ந்து போகும்போது வெறும் கையுடன் போகவில்லை தனது அடையாளமாக தன்னைபோல்…தன்னைவிட சிறப்பான புத்திரர்களை இக் கனடிய மண்ணில் விட்டுச் சென்றுள்ளார்.
உடல் பிரிந்தாலும் அவர் ஆன்மா என்றுமே இன்புற்றிருப்பதாக.

கனடா வாழ் இடைக்காடு வளலாய் உறவுகள்.
23.11.2017